அமெரிக்க புற்றுநோய் சங்கம் நடத்திய ஆய்வில், ஜென் எக்ஸ் மற்றும் மில்லினியல் தலைமுறையினர், முந்தைய தலைமுறையினரை விட 17 வகையான புற்றுநோய்கள் பாதிக்கும் ஆபத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2000 முதல் 2019 வரையிலான தரவுகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், இளைய தலைமுறையினரின் புற்றுநோய் விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளதை கண்டறிந்துள்ளனர். மார்பகம், கணையம் மற்றும் இரைப்பை புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர். இளைய தலைமுறையினரிடையே புற்றுநோய் விகிதங்கள் அதிகரிப்பதற்கான சரியான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. அதிகரித்து வரும் உடல் பருமன் சில வகையான புற்றுநோய்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அத்துடன், புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முயற்சிகளில் மாற்றங்கள் தேவைப்படுவதாக கூறுகின்றனர்.