கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம், தமிழக அரசுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில், சென்னைக்கு அருகில் உள்ள திருப்போரூரில், கோத்ரேஜ் நிறுவனத்தின் உற்பத்தி மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 515 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இந்த மையத்தில், சிந்தால், கோத்ரேஜ் எக்ஸ்பர்ட் ரிச் கிரீம், கோத்ரேஜ் செல்ஃபி ஷாம்பூ ஹேர் கலர், குட் நைட் போன்ற தயாரிப்புகள் உற்பத்தி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
கோத்ரேஜ் நிறுவனத்தின் இந்த உற்பத்தி மையம் மூலம், 400 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதில் 50% பெண் தொழிலாளர்களை பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 5% மூன்றாம் பாலினத்தவரை நியமிக்க உள்ளதாக கோத்ரேஜ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி நிசபா கோத்ரேஜ் தெரிவித்துள்ளார். அத்துடன், புதிதாக கட்டமைக்கப்பட உள்ள இந்த உற்பத்தி மையம், புத்தாக்க எரிசக்தியில் இயங்கும் படி பசுமை வளாகமாக அமைக்கப்படும் என கூறியுள்ளார்.