செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தற்போது அறிமுகமாகியுள்ள சாட் ஜிபிடி, பொதுமக்களிடையே பெரும் ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில், பிட்ஸ் பிலானி முன்னாள் மாணவரும் தொழில் முனைவோருமான சுகுரு சாய் வினித் என்பவர், புதிய சாட்பாட் ஒன்றை வடிவமைத்துள்ளார். கீதா ஜிபிடி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாட்பாட், தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பகவத் கீதையிலிருந்து பதில் சொல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கூகுள் நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 28ஆம் தேதி, பகவத் கீதை அடிப்படையிலான சாட்பாட் உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டது. மேலும், அதன் பணிகள் ஒரே நாளில் நிறைவு செய்யப்பட்டு, செயலி அதே நாளில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஜிபிடி 3 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இந்த செயலியில், 'வாழ்க்கைக்கான அர்த்தம் என்ன?' என்று கேள்வி கேட்கப்பட்டால், அதற்கான பதிலை பகவத் கீதையின் விளக்கங்களோடு சொல்கிறது. உலகிற்கு தர்மத்தை எடுத்துச் சொல்லவே இந்த திட்டத்தில் ஈடுபட்டதாக வினித் தெரிவித்துள்ளார். மேலும், இதற்காக பொதுமக்களிடம் நன்கொடை வழங்கவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.