ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL), நல்வாழ்வு ஊட்டச்சத்து மற்றும் உணர்வு உணவு நிறுவனத்தை பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
தற்போது கரிம உணவுகள் மற்றும் ஆரோக்கியமான உணவுகள் உட்கொள்வது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக HUL நிறுவனமானது சமீபகாலமாக இந்த பிரிவில் கவனம் செலுத்தி வ௫கிறது. அதற்கு அடித்தளமாக சொந்த தயாரிப்பான அன்னபூர்ணா பிராண்டின் ஆட்டா மற்றும் உப்பை விற்பனை செய்கிறது. அதைத் தொடர்ந்து Wellbeing Nutrition மற்றும் Conscious Food நிறுவனங்களை கையகப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது HUL.
இதில் Wellbeing Nutrition நிறுவனத்தின் கையகப்படுத்தல் மதிப்பு சுமார் 20 மில்லியன் டாலர்கள் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் Conscious Food ன் மதிப்புத் தொகை இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. 2019 இல் நிறுவப்பட்ட Wellbeing Nutrition , தினசரி ஆரோக்கிய பொருட்கள், இயற்கை ஊட்டச்சத்து மற்றும் அழகுசாதனப் பொருட்களை தயாரிக்கிறது. அதேபோல Conscious Food 1990 இல் தொடங்கப்பட்டது. இது முளைத்த கோதுமை டாலியா, முளைத்த ராகி மாவு, ரவை, செரிமான கலவை போன்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறது. இது தவிர HUL ஊட்டச்சத்து மருந்து துறையில் நுழைய திட்டமிட்டுள்ளதால், 9Unicorns, DSG கன்சியூமர் பார்ட்னர்கள், விப்ரோ கன்சியூமர் போன்றவற்றின் ஆதரவுடன் பவர் கம்மீஸ் உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.