செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரைஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியலாளர் டாக்டர். ஸ்காட் சாலமன், செவ்வாயில் பிறக்கும் குழந்தைகள் பல்வேறு உடல் மாற்றங்களுக்கு உள்ளாக நேரிடும் என தெரிவித்துள்ளார்.
நாசா 2030களில் மனிதர்களை செவ்வாயில் அனுப்பி வைக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அதேபோல், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் 30 ஆண்டுகளுக்குள் செவ்வாயில் ஒரு நகரத்தை நிறுவுவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில், செவ்வாயின் கடுமையான சூழல் மனிதர்களின் உடல்நிலையை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, செவ்வாயில் குறைந்த ஈர்ப்பு விசை, காந்தப்புலம் இல்லாதது, அதிக கதிர்வீச்சு ஆகியவை மனித உடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். இதனால், பச்சை நிற தோல், பலவீனமான தசைகள், பார்வை குறைபாடு, எலும்புகள் பலவீனமடைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம் என டாக்டர். ஸ்காட் சாலமன் எச்சரித்துள்ளார்.