நிலவுக்கு மிக நெருக்கமாக பயணித்து வரும் சந்திரயான் 3 விண்கலம் எடுத்த நிலவின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தில், நிலவின் மேற்பரப்பு காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் விடுவிக்கப்பட உள்ள நிலையில், இஸ்ரோ வெளியிட்டுள்ள புகைப்படம் கவனம் பெற்றுள்ளது. கடந்த 9ம் தேதி, இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அப்போது, சந்திரயான் 3 விண்கலம் நிலவிலிருந்து 4400 கிலோமீட்டர் தொலைவில் சுற்றுவட்ட பாதையில் பயணித்துக் கொண்டிருந்தது. நிலவில் அமைந்துள்ள கூலம்ப், போக்சோபட், வெப்பர், டைசன் போன்ற பள்ளத்தாக்குகள் இந்த புகைப்படத்தில் தெளிவாக காணப்படுகின்றன. லேண்டரில் உள்ள எல்எச்வி கேமரா மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.