பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) 7 பில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கடன் தொகை 37 மாதங்களில் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும். முதல் தவணையாக 1 பில்லியன் டாலர் உடனடியாக வழங்கப்படும். இந்த நிதியுதவிக்காக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், IMF தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தானுக்கு கடன் கிடைக்க ஆதரவாக இருந்த சீனா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான், தனது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த எடுத்த நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியம் பாராட்டினாலும், பலவீனமான நிர்வாகம், குறுகிய வரி அடிப்படை, சுகாதாரம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பில் போதுமான முதலீடு செய்யாதது போன்ற சில பிரச்சினைகள் இன்னும் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூன் மாதம் இரு தரப்புக்கும் இடையே எட்டப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த கடன் உதவி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.