இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் மீதான இறக்குமதி வரி 6% ஆகவும், பிளாட்டினம் மீதான இறக்குமதி வரி 6.4% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களின் விலைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாமிரம், உருக்கு போன்றவற்றுக்கான இறக்குமதி வரியிலும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், கைபேசிகள் மற்றும் கைபேசிகளுக்கான உதிரி பாகங்கள் மீதான இறக்குமதி வரி 15% ஆக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கைபேசிகளின் விலைகள் கணிசமான அளவில் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.