அமெரிக்க நவீன டிரோன்களை இந்தியா வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் குறித்து இன்று முடிவாக உள்ளது.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பிரிடேட்டர் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. ஆனால் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே அமெரிக்காவின் பிரிடேட்டர் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று முடிவு செய்ய உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இன்று நடைபெறும் கூட்டத்தில் ஒப்பந்தம் குறித்து இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வருகிற 21-ந் தேதி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக செல்வதற்கு முன்பாக பாதுகாப்பு அமைச்சக கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடியின் அமெரிக்க வருகைக்கு முன்பாக இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.