இந்தியாவின் சொந்த பணப் பரிவர்த்தனை அட்டையாக ரூபே உள்ளது. இந்த அட்டையை யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன், அதற்கான தொழில்நுட்ப, செயல்பாட்டு அம்சங்களும் பரிவர்த்தனை செயலிகள் மற்றும் வலைத்தளங்களில் கொண்டுவரப்பட்டன. இந்நிலையில், ரூபே கார்டுகளை உலகளாவிய முறையில் பயன்படுத்த திட்டமிடப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேரிலேன்ட் பல்கலைக்கழக மாணவர்களுடன் கேள்வி பதில் உரையாடலில் நிர்மலா சீதாராமன் பங்கு பெற்றார். அப்போது, இந்திய மாணவர் ஒருவர், "மேரிலேன்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவன் நான். இந்தியாவின் யுபிஐ பண பரிவர்த்தனை அம்சம் குறித்து நான் பெருமைப்படுகிறேன். அது குறித்த எதிர்கால திட்டம் குறித்து அறிய விரும்புகிறேன். இந்தப் பரிவர்த்தனை முறையை சர்வதேச நாடுகளுடன் எவ்வாறு இணைத்துக் கொள்வது? குறிப்பாக, அமெரிக்காவில் இந்தியாவின் யுபிஐ முறைகள் செயல்பாட்டில் இல்லை. அதனைக் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
அவரது கேள்விக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், “பல்வேறு நாடுகளில் இந்தியாவின் ரூபே அட்டைக்கு அனுமதி வழங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றில் இந்தியாவின் ரூபே கார்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, உலகின் பிற நாடுகளிலும் இதனைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அது மட்டுமல்ல; யுபிஐ பண பரிவர்த்தனை தளங்களான பீம் செயலி மற்றும் என் சி பி ஐ (NCPI) ஆகியவற்றுக்கும் பிற நாடுகளில் அனுமதி வழங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், எதிர்காலத்தில், பிற நாடுகளில் உள்ள இந்தியர்கள், எளிமையாக பணப் பரிவர்த்தனை செய்ய முடியும்” என்று கூறினார்.