கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், இந்தியாவின் டேப்லெட் விற்பனை 22% சரிவடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சைபர் மீடியா ரிசர்ச் என்ற சந்தை மதிப்பீட்டு ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு டேப்லெட் விற்பனையுடன் ஒப்பிடுகையில், கடந்த காலாண்டில் மொத்த விற்பனை 29% உயர்ந்துள்ளது. ஆனால், வருடாந்திர அடிப்படையில் 22% சரிவு பதிவாகியுள்ளது. மேலும், கடந்த காலாண்டில், 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய டேப்லெட் விற்பனை 7% உயர்வை பதிவு செய்துள்ளது. நிறுவனங்கள் வாரியாக, ஆப்பிள் நிறுவனம், இந்தியாவின் மொத்த டேப்லெட் விற்பனையில் 25.38% வகித்து முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக, சாம்சங் நிறுவனம் 25.31% விற்பனையுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி 6% என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் இடத்தில் உள்ள லெனோவா நிறுவனம் 23% விற்பனையை பதிவு செய்துள்ளது. அதே வேளையில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், விற்பனையில் 30% சரிவை பதிவு செய்துள்ளது. சீனாவை சேர்ந்த ரியல்மி மற்றும் ஷாவ்மி நிறுவனங்கள், இந்தியாவின் டேப்லெட் விற்பனையில் முக்கிய முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளன. ரியல்மி விற்பனை பாதியாக குறைந்து 8% அளவில் பதிவாகியுள்ளது. அதே வேளையில், ஷாவ்மி நிறுவனத்தின் டேப்லெட் விற்பனை 155% உயர்ந்து, மொத்த டேப்லெட் விற்பனையில் 6% பங்களிப்பை பதிவு செய்துள்ளது.