உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க இதழ்களில் ஒன்றான டைம்ஸ், செயற்கை நுண்ணறிவு துறையில் தங்களது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள முக்கிய நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் டைம்ஸ் 100 ஏஐ பட்டியலில் இந்திய-அமெரிக்கர்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளனர்.
தலைவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் என வகைப்படுத்தி டைம்ஸ் 100 ஏஐ பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் 15 வயது முதல் 77 வயது வரை பல்வேறு வயதுடைய நபர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைப் பொறுத்தவரை, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் புகழ்பெற்ற நடிகர் அனில் கபூர் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, அமேசானின் ரோஹித் பிரசாத் உள்ளிட்ட இந்திய அமெரிக்க பிரபலங்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இவர்களுடன், அரவிந்த் ஸ்ரீனிவாஸ், அமந்தீப் சிங் கில், வினோத் கோஸ்லா, திவ்யா சித்தார்த், ஆனந்த் விஜய் சிங், துவாரகேஷ் படேல், ஆரத்தி பிரபாகர் போன்ற பிற இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளனர்.