ஐநா சபையின் தலைவர் அன்டோனியோ குட்டரஸ் இந்தியா வருகை தந்துள்ளார். இன்று, மும்பையில், தாஜ் ஹோட்டலில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு அஞ்சலி செலுத்தினார். “தீவிரவாதம் என்பது மிகக் கொடிய செயலாகும். தீவிரவாதத்தை எந்த காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது. மேலும், அது எந்த காரணமும் இல்லாமல் நிகழ்த்தப்படும் குற்றமாகும்” என்று கூறினார். அதன்பின்னர், பாம்பே ஐஐடி யில் உரையாற்றினார். அப்போது, கொரோனா பரவலின் போது, இந்தியாவின் மனிதாபிமான செயல்பாடுகளால் ஏற்பட்ட உலக நன்மைகள் குறித்து கூறினார்.
“கொரோனா பரவலின் போது, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் தடுப்பூசிகள் போன்றவற்றை இந்தியா அண்டை நாடுகளுக்கு இலவசமாக அளித்தது. அதன் பின்னர், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு, மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்தது. இந்தியாவின் இத்தகைய மனிதாபிமான செயல்பாடுகளால், இந்தியா உலக அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன், ஐநா சபை இந்தியாவின் பங்களிப்பை பெரிதும் நாடுகிறது” என்று அவர் கூறினார். அத்துடன், “கொரோனா தடுப்பூசிகள் குறித்து இந்தியாவால் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தளமான கோவின் (CoWin) உலகிலேயே அதிகமான தடுப்பூசி பதிவை கொண்டதாகும்” என்று கூறினார். மேலும், 2 மில்லியன் டோஸ்களுக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக கோவின் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “உலகில் அமைதியை நிலை நாட்ட, ஐநா சபையுடன் சேர்ந்து, இந்தியா சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறது. கடந்த 1948 ஆம் ஆண்டு முதல் இதுவரை, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஐநா சபையின் 49 அமைதி திட்டங்களில் பங்கேற்றுள்ளனர்” எனக் கூறினார். முன்னதாக, இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்த அவர், தற்போதைய நிலையில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாகவும் வளர்ந்துள்ளதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். நாளை குஜராத் செல்ல இருக்கும் அவர், பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து, லைஃப் திட்டத்தை தொடக்கி வைக்க உள்ளார். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர், அவருடன், சர்வதேச விவகாரங்கள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.