இண்டிகோ விமான சேவை நிறுவனத்தின் மொத்த விமானங்கள் எண்ணிக்கை 300 ஆக விரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், ஏர்பஸ் ஏ320 சிஇஓ மற்றும் என்இஓ, ஏ321 என்இஓ மற்றும் ஏடிஆர் 72-600 ரக விமானங்கள் இண்டிகோ நிறுவனத்தால் இயக்கப்பட்டு வருகின்றன. விமானங்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது இண்டிகோ நிறுவனத்தின் கனவுகளுக்கு சிறகு வழங்கியது போல் உள்ளதாக, தலைமை செயல் அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்தில் பல உயரங்கள் எட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அத்துடன், செயல்திறன் அடிப்படையில் முன்னேற்றம் பதிவாகியுள்ளதாகவும் கூறினார். குறைந்த விலையில் விமான சேவை வழங்கி வரும் இண்டிகோ விமான நிறுவனம் சார்பில், நாள் ஒன்றுக்கு 1600 க்கும் அதிகமான விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. மேலும், 76 உள்நாட்டு விமான நிலையங்கள் மற்றும் 26 சர்வதேச விமான நிலையங்களை இணைக்கும் வகையில் இண்டிகோ நிறுவனத்தின் ஒரு நாள் விமான போக்குவரத்து உள்ளது.