இந்தோனேசியாவில், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், கோல்டன் விசா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, அமெரிக்கா, அயர்லாந்து, நியூசிலாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இது போன்ற கோல்டன் விசா திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சகம், கோல்டன் விசா குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. தேசிய பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இந்த திட்டம் கொண்டு வரப்படுவதாக தெரிவித்துள்ளது. அதன்படி, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 5 முதல் 10 ஆண்டு காலத்திற்கு இந்தோனேசியாவில் தங்கி இருக்க அனுமதி வழங்கப்படுகிறது. அந்நாட்டின் குடியுரிமைகள் துறை பொது மேலாளர் சில்மி கரீம் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். மேலும், 5 ஆண்டு விசா பெறுவதற்கு, தனி நபர் ஒருவர் இந்தோனேசியாவில் 2.5 மில்லியன் டாலர்கள் மதிப்பில் நிறுவனம் ஒன்றை தொடங்க வேண்டும். அதுவே, 10 ஆண்டு விசா பெறுவதற்கு 5 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட வேண்டும். இதுவே, கார்ப்பரேட் முதலீட்டாளர்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு 25 மில்லியன் டாலர்களாகவும், 10 ஆண்டுகளுக்கு 50 மில்லியன் டாலர்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனம் தொடங்க விருப்பமில்லாத வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்தோனேசிய அரசாங்க பத்திரங்களை வாங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு 3.5 லட்சம் முதல் 7 லட்சம் டாலர்கள் வரையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.