2024 ஆம் நிதி ஆண்டுக்கான வருவாய் வளர்ச்சி வழிகாட்டுதல்களை அக்சன்சர் நிறுவனம் குறைத்து அறிவித்துள்ளது. இதன் விளைவாக இந்தியாவின் பிற முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஏடிஆர் மதிப்பு சரிந்துள்ளது.
அக்சன்சர் நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் வளர்ச்சியானது 2% முதல் 5% அளவில் இருக்கலாம் என முன்னர் கணிக்கப்பட்டது. தற்போது, இதனை 1% முதல் 3% ஆக குறைத்து நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் எதிரொலியாக விப்ரோ மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்கள் சரிய தொடங்கியுள்ளன.
அமெரிக்காவின் நியூயார்க் பங்குச் சந்தையில், விப்ரோ நிறுவனத்தின் ஏடிஆர் 2% அளவுக்கு கீழ் சரிந்து, 5.86 டாலர்களுக்கு வர்த்தகமானது. அதே சமயத்தில், இன்போசிஸ் நிறுவனத்தின் ஏடிஆர் 3.9% வீழ்ச்சி அடைந்து 18.34 டாலர்களுக்கு வர்த்தகமானது.