அரசிடமிருந்து பொதுமக்கள் மின்சாரத்தை இலவசமாக பெறுவதற்கு பதில் அதிலிருந்து வருவாய் ஈட்ட முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அம்மாநிலத்தின் ஆரவள்ளி மாவட்டம் மொடசா நகரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: குஜராத் மக்கள் மின்சாரத்தை இலவசமாக பெறுவதற்கு பதில் அதிலிருந்து வருவாய் ஈட்ட முடியும். இதற்கான வழி எனக்கு தெரியும்.
மேசனா மாவட்டம் மோதேரா கிராம மக்கள் தங்கள் வீட்டுக் கூரையின் மீது சோலார் பேனல்களை அமைத்து மின்சாரம் தயாரிக்கின்றனர். இதில் தங்கள் தேவை போக மீதமுள்ள மின்சாரத்தை அரசுக்கு விற்று வருவாய் ஈட்டுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.