எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுக்க சர்வதேச சமூகத்தின் தலையீடு தேவை என பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
ஆசியான் அமைப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களின் 9-வது வருடாந்திர கூட்டம் கம்போடியாவில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள இந்திய பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங், 2 நாள் பயணமாக கம்போடியா சென்றார். அங்கு நேற்று நடைபெற்ற ஆசியான் பாதுகாப்பு துறை மந்திரிகள் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
அப்போது பேசிய ராஜ்நாத் சிங், எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்பது சர்வதேச சமூகத்தின் அவசர மற்றும் உறுதியான தலையீடு தேவைப்படும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும், அதற்கு அலட்சியம் இனி ஒரு பதிலாக இருக்க முடியாது என்றும் தெரிவித்தார். மேலும் பயங்கரவாத குழுக்கள் பணப்பரிமாற்றத்திற்கும், ஆதரவாளர்களை சேர்ப்பதற்கும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உலகம் முழுவதும் தொடர்புகளை உருவாக்கியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.