ஈரான் நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிந்து வெடிவிபத்து ஏற்பட்டதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இருந்து தென்கிழக்கே 540 கி.மீ. தொலைவில் உள்ள தபஸ் நகரில், ஒரு நிலக்கரி சுரங்கத்தில் திடீரென மீத்தேன் வாயு கசிந்து வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு 9 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் சுரங்கத்தில் 69 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். மீட்பு குழுவினர் உடனே சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனால் அதிக அளவிலான மீத்தேன் வாயு கசிவு, மீட்பு பணியில் சிக்கல்களை ஏற்படுத்தியது.
இந்த வெடிவிபத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஜஸ்கியான் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சில தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.