இஸ்ரேலில், நீதித்துறை அதிகாரத்தை குறைப்பதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று, அந்நாட்டின் வர்த்தக அமைப்பு வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. எனவே, பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் போராட்டத்திற்காக குவிந்துள்ளனர். இஸ்ரேலில் இன்று, போக்குவரத்து, கல்வி நிலையங்கள், உணவகங்கள், விற்பனையகங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள், திரள் திரளாக பிரதமர் நெதன்யாவுக்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர். இது இஸ்ரேல் வரலாற்றில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய போராட்டம் ஆகும்.
போராட்டத்தின் முத்தாய்ப்பாக, இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், போராட்டக் களத்தில் இறங்கி உள்ளார். அவர் நெதன்யாகுவை நோக்கி, “உலகின் ஒட்டுமொத்த பார்வையும் இஸ்ரேலின் மீது உள்ளது. எனவே, நீதித்துறை அதிகாரத்தை குறைக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும்” என்று கூறியதோடு, மக்களை போராட்டத்தில் இணைய அழைப்பு விடுத்துள்ளார். ஜெருசலேமில் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் காட்சி தற்போது வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. வரலாறு காணாத இந்த போராட்டத்தால் நெதன்யாகுவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.