நிலவுக்கு லேண்டர் மற்றும் ரோவர் கருவிகளை வெற்றிகரமாக அனுப்பிய சந்திரயான் திட்டத்தின் ஆய்வுப்பணிகள் தொடர்ந்து வருகின்றன. அந்த வகையில், நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா மூலக்கூறுகள் உள்ளது முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ள விக்ரம் லேண்டர் கருவியில் ராம்பா எல் என்ற கருவி உள்ளது. இந்தக் கருவி, நிலவின் தென் துருவப் பகுதியில் பிளாஸ்மா மூலக்கூறுகள் உள்ளதை கண்டுபிடித்துள்ளது. மேலும், அங்கு காணப்படும் பிளாஸ்மா மூலக்கூறுகளை அளவீடு செய்து, அதன் அடர்த்தி மிக குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளது. நிலவில் காணப்படும் பிளாஸ்மாவில், கிட்டத்தட்ட ஒரு கன மீட்டருக்கு 50 லட்சம் முதல் 3 கோடி எலக்ட்ரான் அடர்த்தி உள்ளதாக ராம்பா தெரிவித்துள்ளது. "நிலவை குறித்த ஆராய்ச்சிகளில் இந்த கண்டுபிடிப்பு மிக முக்கியமானதாகும். நிலவுக்கு அனுப்பப்படும் விண்கலன்கள் வடிவமைப்பு பணியில், பிளாஸ்மா அளவீட்டு தரவுகள் மிகவும் உதவியாக இருக்கும். மேலும், எதிர்கால நிலவு திட்டங்களுக்கு இந்த தரவுகள் மிகவும் துணை புரியும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.