ஐடிசி நிறுவனம் தனது முதலாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 4903 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் 18% உயர்வாகும். மேலும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 8.5% சரிவடைந்து, 15828.2 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐடிசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நிறுவனத்தின் எபிட்டா மதிப்பு 10% உயர்ந்து, 5083 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் குறைந்ததற்கு, வேளாண் துறை தொடர்பான வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவே காரணம் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, ஐடிசி குழுமத்தின் வேளாண் வர்த்தகம் 24% சரிவடைந்து, 5705.4 கோடி வருவாயை பதிவு செய்துள்ளது. அதே வேளையில், ஐடிசி குழுமத்தின் சிகரெட் வணிகம் 13% உயர்ந்து, 7465.27 கோடி ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் எஃப் எம் சி ஜி வர்த்தகம் 16% உயர்ந்து, 5166 கோடி ரூபாய் வருவாயை பதிவு செய்துள்ளது. அத்துடன், காகிதம் மற்றும் பேக்கேஜிங் துறையில் 6.5% வருவாய் உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.