ஜோ பைடன் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க செப்டம்பர் 7-ம் தேதி இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
2023 ஆம் ஆண்டு ஜி 20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜி 20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள ஜி 20 நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வர உள்ளார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. மேலும் அவர் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும் கூறியுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ஜோ பைடன் செப்டம்பர் 7-10 தேதிகளில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அங்கு ஜி 20 பிரதிநிதிகள் உடன் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பார். சுத்தமான எரிசக்தி மாற்றம், காலநிலை மாற்றம், உக்ரைன் போரினால் பொருளாதார மற்றும் சமூக தாக்கம், வங்கிகளின் திறனை அதிகரிப்பது, உலக சவால்களை எதிர்கொள்வது, வறுமை ஒழிப்பு போன்றவை குறித்து அவர் விவாதிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.