கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏவப்பட்ட ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஜூஸ் விண்கலம் வியாழனுக்கு செல்லும் வழியில் உள்ளது. தனது 8 ஆண்டுகால நீண்ட பயணத்தின் போது, அண்மையில், பூமியின் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி தனது பாதையை சரி செய்து கொண்டது. ஆகஸ்ட் 20 அன்று பூமியையும், அதற்கு ஒரு நாள் முன்பு நிலவையும் கடந்து சென்றது. அப்போது, JUICE விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள உயர் தெளிவுள்ள அறிவியல் கேமராவான JANUS, நிலவின் பள்ளங்கள் மற்றும் பூமியின் மேகங்களின் விரிவான படங்களை எடுத்துள்ளது.
ஜூஸ் விண்கலம் எடுத்த பூமி மற்றும் நிலவு புகைப்படங்கள், JANUS கேமராவுக்கான ஒரு சோதனையாக அமைந்தது. எதிர்காலத்தில், ஜூலை 2031 ல், ஜூஸ் விண்கலம் ஜோவியன் அமைப்புக்கு வரும்போது, வியாழனின் பனிக்கட்டி நிலவுகளான யூரோபா, கனிமீட் மற்றும் காலிஸ்டோ ஆகியவற்றின் மேற்பரப்புகளை JANUS புகைப்படம் எடுக்கும்.