வியாழன் கோளின் நிலவான Io வில் புதிய எரிமலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசாவின் ஜூனோ விண்கலம் 2023 பிப்ரவரியில் எடுத்த புகைப்படங்களை 1997 நவம்பரில் கலிலியோ விண்கலம் எடுத்த புகைப்படங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது இந்த புதிய கண்டுபிடிப்பு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு, வியாழன் மற்றும் அதன் நிலவுகள் குறித்த ஆய்வில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி உள்ளது.
கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் ஜூனோ விண்கலம் Io வை 3 முறை சுற்றி வந்து ஆய்வு செய்த போது, 9 செயலில் உள்ள எரிமலைகள் மற்றும் பிற மேற்பரப்பு மாற்றங்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த புதிய கண்டுபிடிப்புகள் பெர்லினில் நடந்த யூரோபிளானட் சயின்ஸ் மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. Io வின் பூமத்திய ரேகைக்கு தெற்கே அமைந்துள்ள துடிப்பான எரிமலை கடந்த 27 ஆண்டுகளில் தோன்றியிருப்பது தெரியவந்துள்ளது. ஜூனோ விண்கலம் எடுத்த புகைப்படங்களில் சிவப்பு நிற சல்பர் படிவுகளும், சுமார் 100 கிலோமீட்டர் நீளமுள்ள 2 இருண்ட எரிமலை நீரோடைகளும் தெளிவாகத் தெரிகின்றன.