தமிழ் பஞ்சாங்க அடிப்படையில் அக்னி நட்சத்திரம் நாளை மறுநாள் தொடங்கி மே 28ஆம் தேதி வரை இருக்கின்றது.
ஆண்டுதோறும் மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் காலம் இருக்கும். இதனை வானிலை ஆய்வு மையத்தை சேர்ந்தவர்கள் மார்ச் முதல் மே மாதம் வரை கோடைகாலம் என்று கூறி வருகின்றனர். ஆனால் தமிழ் பஞ்சாங்கம் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் கணக்கிடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டிற்கான அக்னி நட்சத்திரம் நாளை மறுநாள் முதல் 28ஆம் தேதி வரை தொடர்கிறது. பொதுவாக கத்திரி வெயில் காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்து வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி, திருத்தணி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேலான வெப்பம் சுட்டெரித்து வருகின்றது. இதுவரை இல்லாத அளவிற்கு ஈரோடு, சேலத்தில் 108 டிகிரிகளை கடந்து வெப்ப அளவு பதிவாகியுள்ளது. இதே நிலை நீடித்தால் கத்திரி வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட மேலும் அதிகம் காணப்படும். முன்னதாக 2003 ஆம் ஆண்டு மே மாதத்தில் 119.48 டிகிரி வெப்பநிலை பதிவானது தான் உச்சபட்ச வெயில் அளவாக இருந்து வருகிறது.