கென்யா மத போதகர் போதனையை கேட்டு உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
கென்யா நாட்டின் வடகிழக்கு பகுதியில் இந்திய பெருங்கடலையொட்டி அமைந்துள்ள சிறிய கடற்கரை நகரம் மாலிண்டி. இங்கு 'குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம்' என்கிற தேவாலயம் உள்ளது. இதன் தலைமை பாதிரியாராக இருப்பவர் பால் மெக்கன்சி. இவருக்கு சொந்தமான பண்ணையில் சிலர் உடல் மெலிந்த நிலையில் மோசமான நிலையில் இருப்பதாக கடந்த வாரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பண்ணையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 4 பேர் பிணமாக கிடந்தனர். மேலும் 15 பேர் கவலைக்கிடமான நிலையில் இருந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பாதிரியார் பால் மெக்கன்சி தன்னைப் பின்பற்றும் மக்களிடம் உண்ணாவிரதம் இருந்தால் ஏசுவை காணலாம் என போதித்ததாகவும், அதை நம்பி பலர் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதனையடுத்து, போலீசார் அந்த பண்ணையில் சோதனையை தீவிரப்படுத்திய நிலையில் அங்கு தோண்டதோண்ட பிணங்கள் கிடைத்து வருகின்றன. அந்த வகையில் பண்ணையில் இருந்து இதுவரை 90 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.