கேரள மாநிலத்திற்கு கூடுதலாக 1228 கோடி ரூபாய் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த தகவலை, கேரள மாநிலத்தின் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் எம் வி கோவிந்தன் தெரிவித்துள்ளார்.
அண்மையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் அமெரிக்கா பயணம் மேற்கொண்டார். அப்போது, உலக வங்கி நிர்வாக இயக்குநரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது. அதன்படி, சந்திப்பின் விளைவாக, உலக வங்கியிடம் இருந்து ஏற்கனவே 1023 கோடி கடன் பெற்ற நிலையில், கூடுதல் கடன் வழங்கப்பட உள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக இயற்கை பேரிடர்களை அடிக்கடி சந்திக்கும் மாநிலமாக கேரளா உள்ளது. எனவே, இந்த நிதியுதவி கேரளாவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அத்துடன், கேரளாவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, உலக வங்கி முதலீடுகளை செய்ய தயார் நிலையில் உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.