கடல் பகுதியில் ரோந்து பணிக்காக துருக்கியிடமிருந்து மாலத்தீவு அரசு ட்ரோன்களை வாங்கியுள்ளது.
இதற்காக துருக்கி நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதனை அடுத்து முதல் முறையாக ராணுவ ட்ரோன்கள் மாலத்தீவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ட்ரோன்களை இயக்குவதற்கு பிரத்தியேக தளத்தை உருவாக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாலத்தீவு அதிபர் பதவியேற்ற உடன் துருக்கிக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அப்போது ட்ரோன்களை கொள்முதல் செய்ய பேகர் டிபன்ஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், துருக்கியில் தயாரிக்கப்பட்ட 'பேரக்டர் டிபி2' ரக ஆளில்லா விமானங்கள் கடந்த 3ஆம் தேதி மாலத்தீவு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது என்று தகவல்கள் கூறுகிறது.
இதனைத் தொடர்ந்து மாலத்தீவு கடல் கடற்பரப்பில் கண்காணிப்பு அமைப்பை நிறுவி அதன் பொருளாதார மண்டலத்தின் கட்டுப்பாட்டை உறுதி செய்ய மாலத்தீவு அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக அதிபர் மூயிஸ் கடந்த நான்காம் தேதி அறிவித்தார். எத்தனை ட்ரோன்கள் வாங்கப்பட்டுள்ளன என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. அவை தற்போது நூனு மாபாரு சர்வதேச விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது என்று அரசு அதிகாரி ஒருவர் கூறினார். விரைவில் இதன் செயல்பாடு தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.