மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையின் போது, மனித உரிமை மீறல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறின. இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. தற்போது, இந்த வழக்குகளை அசாம் மாநிலத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள கௌஹாத்தி நீதிமன்றத்தில், இணைய வழியில் மணிப்பூர் வழக்குகள் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கில் தொடர்புடைய நபர்கள், இணையவழியில் ஆஜராக வாய்ப்பில்லை என்றால், நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ வழக்குகளை கௌஹாத்தி நீதிமன்றத்தில் விசாரணை செய்ய, உரிய இணைய வசதிகளை வழங்க வேண்டி, மணிப்பூர் மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 21 சிபிஐ வழக்குகள் கௌஹாத்தி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளன. மணிப்பூர் சம்பவங்கள் தொடர்பாக, நியாயமான விசாரணை நடப்பதை உறுதி செய்யவே, அசாம் மாநிலத்திற்கு வழக்குகள் மாற்றப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.