கடந்த சில மாதங்களுக்கு முன்பு, டிக் டாக்கிற்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளிவந்தது. தற்போது, இந்த ரீல்ஸ் மூலமாக, இன்ஸ்டாகிராமில் பொதுமக்கள் செலவிடும் நேரம் 24% உயர்ந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க், இந்த தகவல்களை தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 6 மாதங்களில், ரிலீஸ் பயன்பாடு இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ரீல்ஸ் துறையால், பொதுமக்கள் பெருமளவு ஈர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், பயனருக்கு தேவையான ரீல்ஸ் வீடியோக்கள் முன்னிலையில் வழங்கப்பட்டன. எனவே, பொதுமக்கள் இன்ஸ்டாகிராமில் செலவிடும் நேரம் அதிகரித்துள்ளது" என்று கூறியுள்ளார். மேலும், “மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்து சமூக ஊடகத் தளங்களிலும், மாதாந்திர அடிப்படையில் உள்ள பயனர்கள் எண்ணிக்கை 5% உயர்ந்து, 380 கோடிக்கும் அதிகமாக உள்ளது. பேஸ்புக்கில் மட்டும் தினசரி பயனர் எண்ணிக்கை 200 கோடியைத் தாண்டி பதிவாகியுள்ளது. பேஸ்புக்கில் மட்டுமே வருடாந்திர அடிப்படையில் 4% பயனர் வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.