சமூக ஊடகத் துறை சக்கரவர்த்தி மார்க் ஜூக்கர்பெர்க்கின் நிகர சொத்து மதிப்பு முதல் முறையாக 201 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் அவர் 4வது இடத்தை பிடித்துள்ளார்.
மெட்டா நிறுவனத்தின் பங்கு விலை சாதனை உயர்வைத் தொட்டதன் விளைவாக மார்க் ஜூக்கர்பெர்க் இத்தகைய சாதனையை படைத்துள்ளார். முன்னதாக, 2022 ஆம் ஆண்டில் ஃபேஸ்புக்கிலிருந்து மெட்டாவாக பெயர் மாற்றம் செய்தபோது மற்றும் டிக்டாக் போன்ற போட்டியாளர்களின் வருகையால் நிறுவனம் பெரும் சவால்களை எதிர்கொண்டது. இதனால் அவரது செல்வம் 100 பில்லியன் டாலர்கள் குறைந்தது. ஆனால், தற்போது ஆக்மென்டட் ரியாலிட்டி கண்ணாடிகள், ஓரியன் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போன்ற புதிய திட்டங்களில் நிறுவனம் கவனம் செலுத்தி வருவதால் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. மேலும், நிறுவன செலவுகளை குறைக்க 25% பணியாளர்களை நீக்கியதுடன், 50 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பங்குகளை திரும்ப வாங்கும் திட்டத்தையும் மெட்டா அறிவித்துள்ளது.