இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான மாருதி சுசுகி, செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனையில் 21% வளர்ச்சி பதிவாகி உள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில், மொத்தமாக 167520 என்ற எண்ணிக்கையில் விற்பனை பதிவாகியுள்ளது. இதுவே, கடந்த வருட அக்டோபர் மாதத்தில், 138335 ஆக மட்டுமே பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் மாதத்தில், மொத்தமாக, பயணிகள் வாகன விற்பனை 147072 ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த வருட பயணிகள் வாகன விற்பனையை விட 26% அதிகமாகும். கடந்த வருடத்தின் இதே மாதத்தில் 117013 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, நிறுவனத்தின் சிறிய வாகனங்களான ஆல்டோ, எஸ்பிரஸ்சோ ஆகியவற்றின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த வருட அக்டோபர் மாதத்தில், 21831 ஆக இருந்த சிறிய ரக வாகன விற்பனை, இந்த வருடம், 24936 ஆக உயர்ந்துள்ளது.
பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னீஸ், ஷிப்ட், டூர் எஸ், வேகன் ஆர் போன்ற நடுத்தர வாகன விற்பனை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 1.5 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த வருடத்தில் 48690 ஆக இருந்த நடுத்தர ரக வாகன விற்பனை, 73685 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பிரீசா, எர்டிகா, எஸ் கிராஸ், எக்ஸ் எல் 6 போன்ற பயன்பாட்டு வாகனங்களின் விற்பனையும் உயர்ந்துள்ளது. கடந்த வருடத்தில் 27081 ஆக இருந்த பயன்பாட்டு வாகன விற்பனை, 30971 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நிறுவனத்தின் இதர வகை வாகன விற்பனையிலும் கணிசமான உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.