மைக்ரோசாப்ட் நிறுவனம், பிங்க், எட்ஜ் மற்றும் ஸ்கைப் ஆகிய செயலிகளை இயக்கி வருகிறது. முன்னதாக, பிங்க் தேடுபொறியில் சாட் ஜிபிடி தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் புகுத்தியது. அதனைத் தொடர்ந்து, தற்போது, பிங்க் எட்ஜ் மற்றும் ஸ்கைப் கைப்பேசி செயலிகளில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய சாட்பாட் வசதியை மைக்ரோசாப்ட் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், கைப்பேசிகளில், கூகுள் நிறுவனத்தின் ஆதிக்கம் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்டின் இந்த அறிவிப்பு படி, இதுவரை கணினிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த செயற்கை நுண்ணறிவு சாட்பாட் தொழில்நுட்பம், தற்போது கைபேசிகளிலும் அறிமுகமாக உள்ளது. பயனர்கள் தங்கள் கைபேசியில் மேற்குறிப்பிட்ட செயலிகளின் புதிய அப்டேட்டுகளை தரவிறக்கம் செய்வதன் மூலம், சாட்பாட் தொழில்நுட்ப வசதிகளை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேறொரு குழுவில் சாட் செய்து கொண்டிருக்கும் போதே, பிங்க் செயலியில் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டுடன் உரையாடலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், 100க்கும் மேற்பட்ட மொழிகளில் சேவைகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 169 உலக நாடுகளில் வசிக்கும் ஒரு மில்லியன் பயனர்களுக்கு இந்த சேவை கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிங்க் செயலியில் வாய்ஸ் சாட் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், கேள்விகளை டைப் செய்யாமல் வாய்ஸ் மூலமாகவே கேட்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் தரப்பில் மற்றொரு ஆலோசனை கூறப்பட்டுள்ளது. அதாவது, சாட்பாட் செயலியுடன் ஒரு நாளைக்கு 5 முறை மட்டுமே உரையாட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக நேரம் உரையாடும் பொழுது, சாட்பாட் குழப்பத்துக்குள்ளாகி, சரியற்ற பதில்களை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.