கடந்த சில நாட்களாக உலகின் மதிப்புமிக்க நிறுவனம் எது என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. பிரபல செம கண்டக்டர் நிறுவனமான என்விடியா, மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் இடத்தை பிடித்தது. தற்போது, என்விடியா பங்குகள் சரிந்ததால், மைக்ரோசாப்ட் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
ஜென்சன் ஹுவாங் தலைமையிலான என்விடியா நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 3.4% அளவுக்கு வீழ்ச்சி அடைந்தன. இதனால், கிட்டத்தட்ட 91 பில்லியன் டாலர்கள் அளவுக்கு என்விடியா சந்தை மதிப்பில் இழப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக, மீண்டும் மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகின் மதிப்பு மிக்க நிறுவனமாக முன்னேறியுள்ளது. மூன்று ட்ரில்லியன் டாலர்களை தாண்டி, மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் என்விடியா ஆகிய மூன்று நிறுவனங்கள் சந்தை மதிப்பு கொண்டுள்ளன. முதலிடத்தை பிடிப்பதற்கு மூன்று நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.