இந்தோனேசியாவில் 1.7 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய உள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. குறிப்பாக, கிளவுட் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்த முதலீடுகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா தெற்காசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக இந்தோனேசியா சென்றுள்ள அவர், “இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் புதிய டேட்டா சென்டர் அமைப்பதற்காக மைக்ரோசாப்ட் முதலீடு செய்கிறது. கிளவுட் கம்ப்யூட்டிங் தவிர செயற்கை நுண்ணறிவு சார்ந்த திட்டங்களுக்காகவும் முதலீடு செய்யப்படுகிறது. வரும் 2025 ஆம் ஆண்டு வாக்கில், தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த 2.5 மில்லியன் மக்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி மைக்ரோசாப்ட் சார்பில் வழங்கப்படும்.” என்று அறிவித்துள்ளார். இந்தோனேசியாவை தொடர்ந்து மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் அவர் பயணம் மேற்கொள்ள உள்ளார். தொடர்ந்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தெற்காசிய முதலீடுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.