ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஹைப்பர் சோனிக் ஏவுகணை இஸ்ரேலை தாக்கியது.
இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தினர். ஏமனில் இருந்து ஹைப்பர் சோனிக் ஏவுகணை இஸ்ரேலை தாக்கியது. ஆனால் இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்பு அதை தடுக்கும் முயற்சியில் இருந்தது. எனினும், ஏவுகணையின் பாகங்கள் வெடித்து சிதறி இஸ்ரேலுக்குள் விழுந்தன. இதன் காரணமாக, இஸ்ரேலின் மோடியின் ரெயில் நிலையத்தில் சிறு சேதம் ஏற்பட்டது. அதோடு பென் ஷபென் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அதையடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைத்தனர்.
ஹைப்பர் சோனிக் ஏவுகணை 11 நிமிடங்களில் இஸ்ரேலை தாக்கியது என்றனர் ஹவுதி கிளர்ச்சியாளர்கள். இஸ்ரேலின் தகவல்படி, இந்த தாக்குதலில் காயங்கள் அல்லது உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியளித்துள்ளார். கடந்த ஜூலை 19ல், இஸ்ரேலின் டெல் அவிவ் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். பதிலடியாக, ஜூலை 20ல், இஸ்ரேல் விமானப்படை ஹூடைடா துறைமுகத்தை தாக்கியது, இதில் 6 பேர் உயிரிழந்தனர்.