ஆந்திர மாநிலத்தில் அரசு பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் செல்போன் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது.
ஆந்திராவிலுள்ள அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் காலை 9:30 மணி முதல் மாலை 4 மணி வரை செல்போன்களை வகுப்பறைக்குள் கொண்டு வரக்கூடாது. செல்போன்களை அங்குள்ள அறையில் வைத்து விட்டு வகுப்பறைக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்றும், அவசியம் செல்போன் பயன்படுத்தி ஆக வேண்டும் என்றால் கல்லூரி முதல்வர், பள்ளி தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்ற பின்னரே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் அங்குள்ள குறிப்பேட்டில் எதற்காக செல்போன் பயன்படுத்துகிறோம், அதன் காரணம் என்ன என்பது குறித்து பதிவு செய்ய வேண்டும். முன் அனுமதி பெறாமல் செல்போன் பயன்படுத்தினால் செல்போன் பறிமுதல் செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பெரும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் மாணவர்களுக்கு ஆன்லைனில் செல்போன் மூலம் சில பாடங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், அரசின் இந்த முடிவால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவித்தனர். இதேபோல் பள்ளி, கல்லூரி மாணவர்களும் செல்போன் கொண்டுவர தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.