வருகிற 30-ந் தேதி வரை சபரிமலையில் 8 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தற்போது மண்டல பூஜைக்காக கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு உள்ளது. அதே சமயத்தில் ஆன்லைன் முன்பதிவு முறையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் பக்தர்கள் தினமும் 8 மணி முதல் 10 மணி நேரம் வரை காத்திருந்து அய்யப்பனை தரிசனம் செய்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்களின் வசதிக்காக தரிசன நேரம் 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. அதாவது மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பிறகு மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வந்தது. அதனை முன்கூட்டியே 3 மணிக்கு திறந்து தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் வருகிற 30-ந் தேதி வரை சபரிமலை தரிசனத்திற்கு 8 லட்சத்து 79 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. உடனடி முன்பதிவையும் சேர்த்தால் நவம்பர் மாத இறுதிக்குள் 10 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.