ஒவ்வொரு 71 ஆண்டுகளுக்கும் பூமியில் காட்சி அளிக்கும் வால் நட்சத்திரம் ஒன்று, தற்போது மீண்டும் காட்சியளிக்க உள்ளது. இதற்கு முன்னர், கடந்த 1954 ல் இந்த வால் நட்சத்திரம் பார்வைக்கு தெரிந்தது.
மதர் ஆஃப் டிராகன்ஸ் என்று அழைக்கப்படும் வால் நட்சத்திரம் Comet 12P/Pons-Brooks என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறது. இது ஹாலே வால் நட்சத்திரத்தை போன்றதாகும். கடந்த ஜூலை மாதத்தில் இந்த வால் நட்சத்திரம் 69 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வெடித்தது. எனவே, இதற்கு ‘டெவில்’ வால் நட்சத்திரம் என மற்றொரு பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையில், வரும் ஏப்ரல் 21ம் தேதி, பூமியின் வடக்கு பகுதியில் உள்ளவர்கள் வால் நட்சத்திரத்தை காணலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரிய அஸ்தமனத்துக்கு ஒரு மணி நேரம் கழித்து, மேற்கு வானில் வெறும் கண்களால் பார்க்கக் கூடிய வகையில் இது தென்படும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரியனிலிருந்து கிட்டத்தட்ட 25 டிகிரி கோணத்தில் இது இருக்கும் என கூறியுள்ளனர். அத்துடன், வரும் ஏப்ரல் 8ம் தேதி நிகழும் சூரிய கிரகணத்தின் போது இதனை காண முடியும் என கூறுகின்றனர்.