உலகின் உயரமான மலையான எவரெஸ்ட் தொடர்ந்து உயரத்தில் வளர்ந்து வருவதாக புதிய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. முன்னதாக, சிகரத்தின் உயரம் கூடுவதற்கு, இந்திய மற்றும் யூரேசிய தட்டுகளின் மோதல் என்று கருதப்பட்டு வந்தது. தற்போது, கிட்டத்தட்ட 89,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நதி இணைப்பும் எவரெஸ்ட் மலையின் உயரம் அதிகரிக்க காரணமாக இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கோசி மற்றும் அருண் ஆறுகள் இணைந்ததன் மூலம் ஏற்பட்ட அரிப்பால், அந்தப் பகுதியின் எடை குறைந்துள்ளது. இதனால், "ஐசோஸ்டேடிக் மீள் எழுச்சி" என்ற நிகழ்வு ஏற்பட்டு, எவரெஸ்ட் மலை சுமார் 15 முதல் 50 மீட்டர் வரை உயர்ந்துள்ளது. எளிமையாகச் சொன்னால், ஒரு பொருளின் மீது உள்ள எடையை அகற்றும்போது அது மேலே எழும்பும் என்பது போல, எவரெஸ்ட் மலையும் உயர்ந்துள்ளது. இந்த நிகழ்வு எவரெஸ்ட் மலையின் ஒட்டுமொத்த உயரத்தில் சுமார் 10 சதவீதம் பங்களிக்கிறது. லோட்சே மற்றும் மகாலு போன்ற அருகிலுள்ள மலைகளும் இந்த நிகழ்வால் பாதிக்கப்பட்டுள்ளன. - இவ்வாறு ஆய்வறிக்கை கூறுகிறது.