அதானி குழுமத்தால் இயக்கப்படும் மும்பை விமான நிலையம், முழுமையாக பசுமை எரிசக்திக்கு மாறியுள்ளதாக அறிவித்துள்ளது. விமான நிலைய செயல்பாடுகளுக்குத் தேவைப்படும் 95% எரிசக்தி, நீர் மின் நிலையங்கள் மற்றும் காற்றாலைகள் மூலம் பூர்த்தியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5% எரிசக்தி, சூரிய மின் நிலையங்கள் மூலம் பூர்த்தியாகிறது. இதன் மூலம், 100% பசுமை எரிசக்தி மூலம் இயங்கும் விமான நிலையமாக இது மாறியுள்ளது.
இந்த வளர்ச்சி படிப்படியாக அடையப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில், விமான நிலைய செயல்பாடுகளுக்காக 57% பசுமை எரிசக்தி வாங்கப்பட்டது. அதன் பின்னர், மே மாதம் முதல் ஜூலை மாதத்திற்குள் 98 சதவீதமாக இது உயர்த்தப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில், 100% பசுமை எரிசக்தியில் இயங்கும் விமான நிலையமாக இது மாறியது. இந்தியாவில் பசுமை எரிசக்தி மூலம் இயங்கும் முதல் விமான நிலையமாக உருவெடுத்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில், விமான நிலையத்தின் மொத்த சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மின்சக்தி திறன், ஒரு நாளைக்கு 36 Kwh ஆக உயர்த்தப்பட்டது. முழுமையாக பசுமை எரிசக்திக்கு மாறியதன் மூலம், வருடத்திற்கு 1.2 லட்சம் டன்கள் அளவில் கரியமில வாயு வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் 2029ம் ஆண்டுக்குள் பூஜ்ய கார்பன் உமிழ்வு விகிதத்தை அடைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள், விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.