கடந்த 2016 ஆம் ஆண்டு, நாசாவின் Osiris REx விண்கலம் பூமிக்கு அருகில் உள்ள பெனு என்ற விண்கல்லின் மாதிரிகளை சேகரிக்க அனுப்பப்பட்டது. கடந்த அக்டோபர் 2020இல், பெனு விண்கல்லை, Osiris REx விண்கலம் சென்றடைந்து, அங்கிருந்து மாதிரிகளை சேகரித்து உள்ளது. இது Osiris REx திட்டத்தின் 50% வெற்றியாக கூறப்பட்டது. அதன் பின்னர், பூமியை நோக்கி பயணப்பட்டு வரும் விண்கலம், வரும் 24ம் தேதி பூமியில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.விண்கலத்தில் உள்ள பிரத்தியேக கேப்சூல் வடிவிலான பெட்டகத்தில் மாதிரிகள் உள்ளன. பாராசூட் மூலம் அவை பத்திரமாக பூமியில் தரையிறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. சர்வதேச நேரப்படி, ஞாயிறு காலை 10 மணி அளவில் அவை தரையிறங்கும் என கூறப்பட்டுள்ளது. இதற்கான கவுண்டவுன் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தரை இறக்கத்தோடு, Osiris REx திட்டம் நிறைவு பெறுவதாக நாசா அறிவித்துள்ளது.