உலகின் மசாலாத் தலைநகராக போற்றப்படும் இந்தியாவில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நடத்திய சோதனையில், பரிசோதிக்கப்பட்ட மசாலாக்களில் 12% தரக் குறைபாடுகளுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் MDH, எவரெஸ்ட் உள்ளிட்ட பிரபல மசாலாக்களின் விற்பனை தடை செய்யப்பட்டதை தொடர்ந்து FSSAI தீவிர சோதனையை மேற்கொண்டது. அதன்படி, 2024 மே முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 4054 மசாலா மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 474 மாதிரிகள் தரத்தில் தோல்வியடைந்துள்ளன. தரக் குறைபாடு கண்டறியப்பட்ட மசாலா நிறுவனங்கள் மீது FSSAI கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மசாலாக்களின் தரம் குறித்த சர்ச்சை உலகளவில் பரவி வரும் சூழலில், fssai அறிக்கையால் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு சந்தை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.