நேபாளத்தில் ஆளும் கூட்டணி கட்சி பிளவுபட்டுள்ளது. இந்த நிலையில், புதிய அரசு இன்று பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நேபாள பொதுத் தேர்தலில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நேபாளி காங்கிரஸ் ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. இந்த கூட்டணி தற்போது பிளவுபட்டுள்ளது. நேபாள நாடாளுமன்றத்தின் மேலவை தலைவர் பதவிக்கு தகுதியானவரை தேர்ந்தெடுப்பதில் இரு கட்சிக்கும் இடையே முறிவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஆட்சி மாற்றம் நிகழ்ந்து, புதிய அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய பிரதமர் புஷ்ப குமார் தமல் தலைமையில், சிபிஎன் யு எம் எல், ராஷ்ட்ரிய ஸ்வதந்திரா கட்சி, ஜனதா சமாஜ்வாதி கட்சி ஆகியவற்றில் இருந்து புதிய அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், அவைத் தலைவர் பதவிக்கு வரும் 7ம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறும் எனவும், 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 17 உறுப்பினர்களும், நேபாளி காங்கிரஸ் கட்சியில் இருந்து 16 உறுப்பினர்களும், சி பி என் யுஎம்எல் கட்சியினர் 19 பேரும், சிபிஎன் யுஎஸ் கட்சியை சேர்ந்த 8 பேரும், ஜனதா சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த மூவரும், ராஷ்டிரிய ஜன மோர்ச்சா சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஒருவரும் அவை உறுப்பினர்களாக உள்ளனர்.