நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம், 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தனது சுகாதார காப்பீட்டு பிரீமியத்தை 10% உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. சுகாதார காப்பீட்டு கோரிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், மருத்துவ செலவுகள் உயர்ந்து வருவதாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் நிதி நிலைமையை சீராக வைத்திருக்க இந்த முடிவு உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
பிரீமியம் உயர்வு குறித்து, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் (IRDAI) அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த உயர்வு புதிதாக எடுக்கப்படும் காப்பீட்டு பாலிசிகள் மட்டுமல்லாமல், ஏற்கனவே உள்ள பாலிசிகளுக்கும் பொருந்தும் என்பதால், லட்சக்கணக்கான பாலிசிதாரர்கள் இந்த உயர்வால் பாதிக்கப்படுவார்கள்.