வருகின்ற 2024 ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-1, பிளஸ் -2 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்ட கட்டமைப்பை மத்திய கல்வி அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
மத்திய அரசு கல்விக் கொள்கையை கடந்த 2020 ஆண்டு வெளியிட்டது. இது மத்திய அரசு சார்ந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் சில மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் தற்போது புதிய பாடத்திட்ட கட்டமைப்பை மத்திய கல்வி அமைச்சகம் உருவாக்கி அதனை செயல்படுத்த உள்ளது. இந்த புதிய பாடத்திட்டம் உயர்கல்வியில் சேர்வதற்கான ஒரு வழிமுறையாக பிளஸ்-1, பிளஸ் -2 வகுப்புகளை பார்க்கும் நடைமுறை தகர்த்தெறிய வேண்டும் என்ற நோக்கில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் கலை மற்றும் அறிவியல் பாடத்திட்டம் மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளை கொண்டதாகவும், தொழிற்கல்வி மற்றும் கல்வித் துறைக்கு இடையில் பிரிவினை இருக்கக் கூடாது என்றும் இவை உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இந்த புதிய பாடத்திட்டத்தின் படி பிளஸ் - 1, பிளஸ் -2 மாணவர்கள் இரண்டு மொழி பாடங்களை கண்டிப்பாக படிக்க வேண்டும் எனவும், அதில் ஒரு பாடம் இந்திய மொழியாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போல் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை பொது தேர்வு எழுதி வரும் நிலையில் இனி இரண்டு முறை பொது தேர்வுகளை எழுத வேண்டும் என தெரிவித்துள்ளனர்.