மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு புதிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.
கடந்த 19-ந்தேதி மங்களூரு நாகுரி பகுதியில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்ட ஷாரிக் பலத்த தீக்காயம் அடைந்தார். மேலும் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் என்பவரும் காயம் அடைந்தார். இருவரும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். போலீசார் ஷ்ரிக்கின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது இந்த சோதனையில், ஷாரிக், மங்களூருவில் 3 கோவில்கள் உள்பட 6 இடங்களில் பயங்கரவாத தாக்குதலை நடத்த சதி திட்டம் தீட்டிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
மங்களூரு கத்ரி பகுதியில் உள்ள மஞ்சுநாதர் கோவில், குத்ரோலியில் உள்ள கோகர்ணநாத கோவில், மங்களாதேவி கோவில் மற்றும் மங்களூரு சென்டிரல் ரெயில் நிலையம், கர்நாடக அரசு பஸ் நிலையம், மன்னகுட்டா பகுதியில் உள்ள சாந்திநிகேதன் அரங்கம் ஆகிய 6 பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்த ஷாரிக் சதி திட்டம் தீட்டி உள்ளார்.
இந்த நிலையில், மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு 'அடக்குமுறைக்கு எதிரான இஸ்லாமிய அமைப்பு' என்ற புதிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு அரபு மொழியில் சமூக வலைத்தளங்களில் ஒரு அறிக்கையை பதிவு செய்துள்ளது. அந்த அறிக்கை 23-11-2022 என்ற தேதியில் வெளியாகி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.