அரசு சாதனங்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த நியூயார்க் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
டிக் டாக் செயலி நிறுவனம் சீனாவை சேர்ந்தது. இந்த செயலி மூலம் தரவுகளை திருடுவதாகவும் இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் சீன அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தது. இந்த குற்றச்சாட்டை சீன அரசு மறுத்த போதிலும் இந்தியா உட்பட பல நாடுகள் இச்செயலிக்கு தடை விதித்திருந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு அமெரிக்கா டிக் டாக் செயலியை அரசு சாதனங்களில் பயன்படுத்த சில விதிவிலக்குடன் தடை விதித்தது.
இந்நிலையில், நியூயார்க் மாநில நிர்வாகம் அரசு சாதனங்களில் டிக் டாக் செயலியை முற்றிலும் பயன்படுத்த தடை விதித்துள்ளது. பாதுகாப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நியூயார்க் மேயருக்கான செய்தி தொடர்பாளர் ஜோனா கூறுகையில், டிக் டாக் செயலியால் நகரின் தொழில்நுட்ப அமைப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக சைபர் பிரிவு எங்களுக்கு தகவல் அளித்துள்ளது. இதனை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.