ரஷ்யாவுக்கு 7000 வாகனங்களில் ராணுவ ஆயுதங்களை வடகொரியா அனுப்பி வைத்துள்ளதாக தென் கொரிய பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஷ்யா உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் ஒடைசா நகரில் கடந்த வெள்ளி அன்று ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர்; 53 பேர் படுகாயம் அடைந்தனர். ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நடைபெற்றிருக்கும் அந்த சமயத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. சமீப காலங்களில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தியுள்ள மோசமான தாக்குதல் இது என்று பரவலாக பேசப்படுகிறது. ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா, பெலாரஸ் போன்ற சில நாடுகள் உள்ளன. இந்நிலையில், வடகொரியாவில் இருந்து ரஷ்யாவுக்கு இதுவரை சுமார் 7000 வாகனங்களில் ராணுவ தளவாடங்கள், வெடி பொருட்கள், ஆயுதங்கள், ஏவுகணைகள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டதாக தென்கொரிய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் ரஷ்ய அதிபர் புதினும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உண்ணும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கான ஆயுத வினியோகம் மேற்கொள்ளப்பட்டதாக தென்கொரியா கூறியுள்ளது. வடகொரியாவில் இருந்து கடல் வழியாக மட்டுமின்றி ரயில்களிலும் ஆயுதங்கள் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோன்று ரஷ்யாவில் இருந்து வடகொரியாவுக்கும் வாகனங்களில் பல்வேறு உபகரணங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதிலும் குறிப்பாக எரிபொருட்கள் அனுப்பப்பட்டதாகவும் தென்கொரியா சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளது. எனினும் வடகொரியா மற்றும் ரஷ்யாக ஆகிய இரு நாடுகள் ஆயுதங்கள் பரிமாற்றம் குறித்த தகவலை மறுத்துள்ளன. சமீப காலங்களில் வட கொரியா தங்களிடம் உள்ள ராணுவ ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை அதிக அளவில் பரிசோதித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.